Sunday, November 24, 2019

Cold

"சார் ஜலதோஷம்னா  வருஷத்துக்கு நாலு தடவை வரும்.  இதுக்குப் போய் சின்னப் பிள்ளையாட்டம் டாக்டர பார்க்க வந்துட்டிங்க..." என்று சொல்லி கெக்கே பிக்கேவென்று சிரித்தார் அந்த இ.என்.டி சர்ஜன்.

"கலாய்க்கிறாராமாம்..." என்று மனதில் வெறுத்து சபித்தேன்.

பொறுமையுடன் மூக்குறிஞ்சிகொண்டே, "சார் என் பிரச்சினை அதுவல்ல.  எனக்கு வருஷத்திற்கு  நாலு முறை தான் ஜலதோஷம் என்னை விட்டுப் போகிறது."

கொஞ்சம் சீரியஸானார்.  "சரி என்னன்னு பார்த்துடலாம்."   என்டோஸ்கோப் குச்சியை, மூக்கு துவாரத்தில் விட்டுப்பார்த்தார்.  முழுகலர் படம் திரையில் ஒளிர்ந்தது.

"அடடா இன்பெக்ஷன் இருக்கு, சரி இந்த மாத்திரைகள் எடுத்துக்கோங்க.  ஆவி பிடிங்க.  அப்புறம் இன்னொரு வழி இருக்கு.   ஆனா கஷ்டம்.  இதே யு.எஸ். டாக்டர் சொன்னா கேப்பிங்க.."

மேட்டருக்கு வராமல் படுத்தினார்.

ஜலதோஷம் போக நான் எல்..சி-யில் இருந்து குதிக்கவும் தயாராக இருந்தேன்.  

"தயவு செஞ்சி சொல்லுங்க சார்."

"இதுக்குப் பேர் நேசல் வாஷ்.  அதாவது மூக்கு, அதன் பின்னே உள்ள வெற்றிடங்களை கழுவுவது.  ஒரு லிட்டர் மினரல் வாட்டரில் கல் உப்பு கலந்து கொள்ளுங்கள்.  எவ்வளவு கரைகிறதோ அவ்வளவும்.  ஒரு சின்ன ஸ்பூன்  ஆப்ப சோடா கலந்து கொள்ளுங்கள். இப்போது ஸ்டரைல் வாஷ் திரவம் தயார்.  ஒரு சிரஞ்சில் இழுத்து கொள்ளுங்கள். மல்லாக்க படுத்துக் கொண்டு இந்த நீரை, ஒரு மூக்கு வழியாக விடுங்கள்.  இது உள்வழியாக போய் இன்னொரு துவாரம் வழியாக அல்லது தொண்டைக்குள் இறங்கும்.  ஆனால் பரவாயில்லை.  தொடர்ந்து செய்தீர்கள் என்றால் மூக்கு மற்றும் வழிகளில் உள்ளவை சுத்தமாகும்."

நான் த்ரில் ஆனேன்.

அடுத்த நாள் சனிக்கிழமை.  அதிகாலை பதினோரு மணிக்கெல்லாம் முதல் வேலையாக சொல்யூஷனை கரைத்தேன்.  நடு ஹாலில் படுத்துக் கொண்டு மூக்கு வழியாக டாக்டர் சொன்னபடி செலுத்தினேன்.

அவ்வளவுதான்.   சுரீர் என்று ஏறியது.  மண்டைக்குள் இவ்வளவு பாகங்கள் இருக்கிறது என்று அப்போதுதான் தெரிந்தது.  ஒவ்வொன்றும் தனித்தனியாக ஷாக் அடித்தது.  அச்சேற்ற தயங்கும் வார்த்தைகளை மனதில் கத்தினேன்.  வெளியில் போயிருந்த மனைவிக்கு போன் போட்டு "அறிவிருக்கிறதா" என்று கேட்டு வைத்தேன். (கத்த முடியுமா என்ன?).    பச்சைத் தண்ணீர் ஷவரில் நின்றேன்.  விடாமல் தும்மல் வந்து கொண்டிருந்தது. 

என்னடா இது வம்பாய் போனது.  மண்டைக்குள் இன்னும் தெறித்துக் கொண்டிருந்தது.

அரை மணி கழித்து வெளியே வந்தேன்.  

வீட்டிற்கு வந்திருந்த மைத்துனி "ஊவ்வே"-விக்கொண்டிருந்தாள்.

"என்ன குட் நியூஸா ?"

"உங்க மூஞ்சி, இதென்ன கருமம்?" என்று சொல்யூஷன் பாட்டிலை காட்டினாள்.

"என்னாச்சு குடிச்சிட்டியா..?"

"ஆமாஊவ்வே"  பதில் கிடைத்தது.

வாய்விட்டு சிரித்தேன்.  வெய்யிலிலிருந்து வந்தவள் தாகத்திற்கு, ஹாலில் கிடந்த பாட்டிலை எடுத்து கபக் கபக்கென்று குடித்திருக்கிறாள்.

"வெறும் உப்பு தண்ணி தான்.  வயிறு கிளீனாகிவிடும்" - என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன்.

மறுபடி டாக்டரிடம் நின்றேன்.

சார் நம்ம லைப் ஸ்டைல் அப்படி.  நான் சொல்வதை எல்லாம் உங்களால் செய்ய முடியாது. 
ஏ.ஸி. வேண்டாம்.  சிட்டி புகை அண்டக்கூடாது.  ஏதாவது இயற்கை சூழலில் இருக்க வேண்டும்.

"முடியாது.."

"நான் சொல்லலை.  இதெல்லாம் கஷ்டம்.  நேசல் வாஷ்  பண்ணிங்களா?"

ஒரு விநாடி எரித்தேன்.  "இல்ல சார் பண்ணனும்."  ஆமாம் என்றோ வேண்டாம் என்றோ சொன்னால் விளையப்போகும் கதாகாலட்சேபத்திற்கு அப்போது நான் மனதளவில் உடலளவில் தயாராக இல்லை.

"ஆனா இந்த ரன்னிங் நோஸ் நிக்கவே இல்லை சார்."  என்றேன் பாவமாக.

" சரி.  இந்த கோர்ஸ் ஏழு நாள். அடுத்து இன்னொரு மூணு நாள். அப்பறம் கடைசியா இந்த ஒரு மாத்திரை.  எல்லாம் அடுத்தடுத்து போடுங்கள் சரியாகிவிடும்."

இரு மடங்கு பீஸை நான் மலை பிரதேசம் போய் செட்டிலாகிவிட்டால், இதெல்லாம் உங்களுக்கு எவன் கொடுப்பான் என்று நினைத்துக்கொண்டே கொடுத்துவிட்டு வந்தேன்.

நண்பன் போன் செய்து "என்னடா க்கோல்டு, ரன்னிங் நோஸ் எல்லாம் எப்படி இருக்கு?  நாளைக்கு ஆபீஸ் வந்துடுவயில்ல?" என்று கடுப்படித்தான்.

"ம்ம், நேத்து தண்ணியா இருந்தது, இன்னிக்கு கொஞ்சம் கட்டியாய் இருக்கு," என்று பதிலுக்கு வெறுப்பேற்றினேன்.

"ச்சை... உன்கிட்ட கேட்டேன் பாரு"  என்று போனை வைத்தான்.

ஏழு நாள் போய் மூணு நாளில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது.  கடைசியாக, அந்த ஒரு மாத்திரை டோஸ்முடித்து "ஹப்பாடா"  ஒரு வழியாக நின்றது என்று சந்தோஷமாக படுத்தேன்.

கனவில் மனைவியுடன் டூயட் பாடினேன் (நான் நல்லவன் சார்). டாக்டர் சொன்ன இயற்கை சூழலில் எல்லாம் சுற்றினோம்.  மழையில் நனைந்தோம், ஸ்நோவில் விளையாடினோம் என்றெல்லாம் கனவில் வந்தது.

காலையில் எழுந்ததும் சத்தமாக தும்மினேன்.  தொண்டை கரகரத்தது.  மறுபடியுமா?  கனவில் மழையில் நனைந்ததால் இருக்குமோ?  என்னவாயிருந்தால் என்ன?  இது கண்டிப்பாக அடுத்த ஸ்பெல்.  ஒன்றும் செய்யமுடியாது.


ஹோமியோபதி..  ஹோமியோபதிதான் சரியான மருந்து என்று சிலர் சொன்னார்கள்.  என் பிரச்சனை இன்னும் இருமடங்கு மோசமாகி நான் எல்..சி-யின் இருபத்திஎட்டாவது மாடியில் இருந்தும் குதிக்க தயாராக இருந்தேன்.

"சார் ஜலதோஷம்னா வீட்டு விருந்தாளிங்க மாதிரி. அடிக்கடி வரும்.  வந்தால் மூணு நாள் இருந்து விட்டு தான் போகும்" என்று சொல்லிவிட்டு ஹி ஹி ஹி என்று அவர் ஹாஸ்யத்தை அவரே ரசித்து சிரித்தார்.

நோயாளிகளிடம், அதுவும் குறிப்பாக ஜலதோஷ நோயாளிகளிடம் ஜோக்கடிக்கும் டாக்டர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் கொண்டுவரவேண்டும்.

"சார் என் பிரச்சினை அதுவல்ல,  எனக்கு வரும் ஜலதோஷம் ஹவுஸ் ஓனர் போலவே இருக்கிறது.  எப்பவாவதுதான் லீவ் எடுத்து ஷார்ட் ட்ரிப் போய்விட்டு உடனே திரும்பி வந்து விடுகிறது."

"குட் ஜோக்!  ஹோ ஹோ ஹோ" என்று இதற்கும் சிரித்தார்.

"போதும் பல்லு சுளுக்கிகொள்ள போகுது"  எனக்கு உள்ளுக்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

சரி என்ன சாப்பிட்டீர்கள் என்று ஆரம்பித்த டாக்டர், நேற்று என்ன சாப்பிட்டீர்கள், முந்தாநாள் என்ன சாப்பிட்டீர்கள், எதெல்லாம் அலர்ஜி, எந்த மூக்கு அடைக்கிறது,  நாய்க்கு பயமா, பாம்பிற்கு பயமா,  மேலதிகாரிக்கு பயமா, எதற்கு அதிக பயம், உங்களுக்கு தன்னம்பிக்கை எந்த அளவு, என்று சம்மந்தா சம்மந்தமில்லாமல் முடிவில்லா கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார்.

நான் கவனம் சிதறி ஏதோ ஒரு கேள்விக்கு எரிச்சலாகி, "வெங்காயம்" என்று பதில் சொல்லிவிட்டேன்.

ஓகே.  உங்களுக்கு இந்த மருந்து தான். "அல்லியம் செபா". 

எனக்கு  கொஞ்சம் சந்தேகம் வந்து இன்டர்நெட்டில் தேடியதில்,  "அல்லியம் செபா" வெங்காயத்தில் இருந்து எடுத்தது என்று தெரிந்தது.  என் பதில்களை சீரியஸாக எடுத்து கொண்டார் என்று தெரிந்தது.

"இல்லை இது வேலைக்காகாது,  யாரடா அங்கே டாக்டரை மாற்று..!"

இன்னொரு டாக்டர் வேறு மூன்று மருந்துகள் எழுதிக் கொடுத்தார்.  எது எப்படியிருந்தாலும் ஹோமியோபதியில் மருந்துகளின் பெயர் நன்றாயிருக்கிறது.

மருந்து கடையில் சீட்டை நீட்டினேன்.  கடைப்பையன் ஒரு பெரிய பாட்டிலை எடுத்தான். 
அய்யோ இவ்வளவு குடிக்க வேண்டுமா என்று நினைத்து கொண்டிருக்கும் போதே வேறு ஒரு சின்ன குப்பியை எடுத்து, அதிலிருந்து ஏதோ ஒன்றை கீழே ஊற்றிவிட்டு இந்த பெரிய பாட்டிலிலிருந்து மாற்றினான்.

"ஹலோ ஹலோ என்ன பண்றீங்க?"

"வெறும் தண்ணி சார்."

"அதெல்லாம் தெரியாது, சுத்தமாக மாற்றுவதென்றால் தா, இல்லையென்றால் வேண்டாம்."  என்று முறைத்து, ஒரு வழியாக வாங்கிக்கொண்டு வந்தேன்.

எல்லாம் ஆல்கஹாலில் கலந்தது என்று நினைக்கிறேன்.  திறக்கும் போதே தெக்கிலா வாசனை அடித்தது.

, இது நல்லாஇருக்கே, கொஞ்சம் ஊறுகாய் கொண்டுவா என்றேன் மனைவியிடம்.

"ம்ம் ஜோக்கு..? குளித்து விட்டு கெளம்பு ஆபிஸ்க்கு டைம் ஆகுது" என்று மிக பணிவாக சொன்னாள்.

மருந்து சாப்பிடும் அரை மணிக்கு முன் பின் எதுவும் சாப்பிட கூடாது என்று நினைவுறுத்தினாள்.   தண்ணீர் கூட.   அப்படியே அந்த இன்சூரன்ஸ் செக்-கை சேர்த்து விடுங்கள்.  நல்ல பிள்ளையாக தலையாட்டி கிளம்பினேன்.

எனக்கு யாராவது கூடாதென்றால், உடனே அது வேண்டும் என்று தோன்றும்.  முக்கியமாக தண்ணீர்.  ஓரளவு கட்டுப்படுத்தி அரை முக்கால் மணி கழித்து யாருக்கும் தெரியாமல் கொஞ்சூண்டுமருந்தை ஜாக்கிரதையாக மேஜைக்கடியில் கலந்தேன்.  ஒரே மூச்சில் குடித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன், யாரும் கவனிக்கவில்லை.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது.  காலை டீ காபி எல்லாம் போனது.   தெக்கிலா (செல்ல பெயர் வைத்து விட்டேன்) மட்டும்தான்.

ஆபிஸ் கொண்டு போகும்பையில், லட்டு, டானிக், பிராந்தி, விபூதி எல்லாம் கலந்த வாசனை வர ஆரம்பித்தது.   செக் ஞாபகம் வர அவரசமாக கை விட்டு தேடினேன்.   மருந்தெல்லாம் வெளியே வந்து, செக்கில் சரியாக, தொகை மற்றும் கையெழுத்தில் பட்டிருந்தது.  விடிந்தது, மறுபடி நான் இன்சூரன்ஸ் கம்பனிக்கு போன் செய்து, புரியவைத்து, மறுபடி செக் வாங்குவதற்குள் மறுபிறவி எடுக்க வேண்டுமே என்று யோசித்த போது தலை சுற்றியது.

வெறுத்து போய் மருந்து குப்பிகளை தூக்கி அடித்தேன்.  என்ன மருந்து குடித்தும் ஒன்றும் நின்ற பாடில்லை.  இதில் பதினோராயிரம் இன்சூரன்ஸ் செக்கும் காலி.

விறு விறுவென்று வெயிலில் வியர்வை வழிய அன்றைக்கு அலைந்ததில், லேசாக அடங்கியிருந்த ஜலதோஷம் மறுபடி தலை தூக்கியது.

ஜலதோஷம் இவ்வாறாக என் வாழ்க்கையின் சாரலாயிற்று.  சாரி.  சாரமாயிற்று.  தும்மலை, அதிக சத்தத்துடன் செய்ய பழகிகொண்டேன்.  ஏதோ நம்மால் முடிந்தது.  மற்றவர்களுக்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாகவாவது இருந்து விட்டு போகட்டுமே. 

****