Monday, May 16, 2016

நீ

கொட்டும் மழை வெளியே
சாய் நாற்காலி, நல்லத் தமிழ் நாவல்
கொதிக்கும் தேநீர்
கொறிக்க ஏதேனும்
இவையெல்லாம் இல்லை என்றால் என்ன..?
உன்னை அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்
மழையைப் பார்த்தபடி.
****

பொங்கி விழுந்து
உன்னிடம் கலக்கும்
உன்னதப் பொழுதுகளில்
மந்திரம் போல்
உச்சரித்துக் கிடக்கிறேன்
உன் பெயரை.
*****


எப்போது விழுந்தாலும்
முதல் தூறலுக்கு
சிலிர்க்கும்
உன் வருகை தரும்
உவகைப் போல்
*****

என்றும் போல் அழகாகத் தான்
வந்தாய்
ஒரு உடனடி கவிதையை
உள்ளிருந்து கிளப்பும்
அளவிற்கு...!
*****



உன் போலத்தான் இந்த கவிதையும்.
தூரமாய் நின்று கொண்டு
தொந்தரவு செய்கிறது.

எண்ணமாய் மனதில் நிரம்பி
காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி
சவால் விடுகிறது.

நெருங்கி அருகில் வர
சொல்லிழக்க வைக்கிறது.

எனக்காய் வசப்படுத்த எத்தனிக்கையில்
முரண்டு பிடிக்கிறது.

‘சாி, வேண்டாம் போ ‘ என்றிருந்தால்
கிட்ட வந்து கொஞ்சுகிறது.

சட்டென்று இழுத்து என்னருகில்
இருத்திக் கொள்ள

கைகளில் மலர்கிறது
மிக அழகாய்.





http://old.thinnai.com/?p=30205124

மனதின் பதிவுகளில் இருந்து...

வரிகளில் இல்லை.
வார்த்தைகளில் இல்லை.
அதன் ஊடே
இழைந்து வழியும்
உணர்வுகளின் அர்த்தங்களில்
பொதிந்திருக்கும்
நீங்கள் தேடும்
கவிதை...
*****

பதினாறு வருட
பழைய கடிதங்கள்
கிழிப்பதற்கு எளிதாய்
வருகிறது...
  
உணர்வுகளை ஆனால்
கிழித்துப் போட முடியவில்லை

பொங்கிப் பிரவாகித்திருந்த
அன்பு மொழிகளை
தேக்கி வைத்திருந்தன
அவ்வரிகள்.
வார்த்தைகள்.

கிளறி விட்டது இன்று
எதை எதையோ...


********


விடைசொல்லாமல் போனதென்ன
விடியலே
வெளுத்துவிடும் என்று நினைத்திருந்த
கடுங்குளிர் கும்மிருட்டு இரவுகள்
பொறுக்கவியலா வேதனைகளுடன்
நீள்கிறதேயன்பே....

***.

அவசரமாய் நகரும் அலுவல் பொழுதுகள்
புத்தியின் வேகம் மூழ்கும்
அடுத்தடுத்த நிகழ்வுகளில்
மின்னஞ்சல் சொல்லும் முன்னூறு வேலைகள்
நாளைக்கு சரி செய்ய நானூறு வேலைகள்

தென்றல் போல் மனதில் வந்தாய்
இதயம் கிளறி வேர்விடும்
ஒரு புன்னகை மலருடன்

அது தரும் எல்லையில்லா இதம்
என் காயங்கள் ஆற்றும் மாயம்

ஒரு நொடி நிற்க நேர்ந்தால்
தேடுகிறதென் கண்கள் உன்னையே
நீ தந்த பார்வையின் துணையோடு
நீ தந்த அன்பின் உயிர்ப்போடு

விடுவேனா அந்த ஒளியின் துணையை
உன் வசீகரம் தாண்டி வேறெதுவும்
தெரியாதேயெனக்கு
என்று நினைக்கும் கணம்

மனம் தொலைந்தது உன் நினைவில்
கை வரைந்தது
இந்த கவிதையை.

*****


பிரபஞ்சத்தில் எங்கும்
நிறைந்திருக்கும்
உங்களுக்கான வாக்கியங்கள்

அது உங்கள்
தோல் வரை  செல்கிறதா
தலை வரை   செல்கிறதா
மனம் வரை  செல்கிறதா
என்பதுதான்
உங்களை வரையறுக்கிறது
****