Tuesday, July 22, 2008

மரணம் பற்றி சில...

மரணம் பற்றி சில குறிப்புகள்...

இருவர் சுமந்ததை
நால்வர் சுமக்கும்
தருணம்.

***

பிணத்தின் முகம் பார்த்தும்
சலனப்படாத மனதை
கள்ளம் கபடமற்ற பாசத்தின்
கண்ணீர் கரைத்து விடுகிறது

***

அப்பன் சாவான்
மகன் சாவான்
பேரன் சாவான்
ஒரு தலைமுறையின்
மிகச் சிறந்த வரம் இது
முறை பிழற்தல்
முன் வினைச் சாபம்

***

இறுதி யாத்திரையில்
இறைவனை விளித்து
ஒற்றை கூக்குரல்
உடைகிறது நெஞ்சு
வலுவிழக்கின்றன கால்கள்

***

விடையனுப்பி
கழுவித் தள்ளிய
வீட்டில்
சம்மந்தி வீட்டார்
சாதம்
தவிர்க்க முடியாதது
வயிற்றின்
அமிலம்

***

விதி எத்தனயோ
வழி செய்திருக்கிறது
ஆனால்
என் வீட்டிலிருந்து
காட்டிற்க்கு
ஒரே வழி

***

எத்தனை தயாராய்
இருந்தாலும்
இது வலிதான்
இது துயரம்தான்

***

சிலர் சிலருக்கு
இறந்த பின்தான்
அறிமுகம் ஆகிறார்கள்

***

மயானத்தில் கூட
எல்லாரும் விட்டுப்
போனப்பின்தான்
அமைதி.
இப்போது வருகிறது
என் தூக்கம்.
***

No comments: